செய்திகள்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

காணிகளை நிருணயித்தல் என்றால் என்ன?

இலங்கை நாட்டில் இருக்கின்ற அனைத்துக் காணிகளில் அரசாங்கக் காணிகள் யாவை? தனியார் காணிகள் யாவை? என்பதைத் தீர்மானிப்பதும், தனிப்பட்டவைகள் எனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளைச் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதும், அக்காணிகளுக்காக அவர்களுக்கு காணி வரைபடங்களை வழங்குவதும், அரசாங்கத்துக்குரிய காணிகளை அரசாங்கத்துக்கு ஒப்படைப்பதும் உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகள் காணி நிருணயம் எனக் கருதப்படுகிறது.

இலங்கைக்குக் காணி நிருணயம் தேவைப்பட்டது ஏன்?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியொன்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குக் காணி நிருணயம் தேவைப்பட்டது. 1815 வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையர்கள் காணிகளின் அனுபவ உரிமைகளை அனுபவித்தாலும், அக்காணிகளின் உரிமை மன்னரிடமிருந்ததால் பிரசைகளிடம் உரிமை ஒப்படைக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறிருந்தபோது 1815ஆம் ஆண்டு இலங்கை முழுமையாகப் பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததையடுத்து மன்னராட்சி முறை ஒழிந்தது. பிரித்தானியர்களினால் 1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக் காணி அத்துமீறல் தடைக் கட்டளைச் சட்டம் (No. 12 of 1840 The Prevent Encroachments upon Crown Lands) பிரகடனப்படுத்தப்பட்டது. எவரேனும் ஆளொருவருக்குத் தனது காணி தனக்குரியது என உறுதிப்படுத்த முடியாவிட்டால், அக்காணி அரசுடைமையாகும் என அக்கட்டளைச் சட்டத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்போது இலங்கையர்கள் பரம்பரையாக அனுபவித்ததும் பயிர்ச்செய்கையும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதிலிருந்து உரிமையை உறுதிப்படுத்துவதற்காக உரித்துறுதி, உரிமைச்சான்று, கொடையளிப்பு உறுதி போன்ற எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனப் பிரித்தானியர்கள் கருதினர். 1840ஆம் ஆண்டின் காணி அத்துமீறல் தடைக் கட்டளைச் சட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இலங்கையர்கள் இழந்துவிட்டனர். இந்நிலைமை இலங்கையர்களின் கடும் எதிர்ப்புக்கும் மனக்கவலைக்கும் காரணமாக அமைந்ததால், 1848ஆம் ஆண்டில் மலைநாட்டில் மாபெரும் கலகமொன்று நிகழ்வதற்கும் காரணமாக அமைந்தது. இதனால் பிரித்தானிய அரசாங்கம் இப்பிரச்சிiயைத் தீர்ப்பதற்கு அரசாங்கக் காணிகள் யாவை? தனியார் காணிகள் யாவை? என்பதைத் தீர்மானிப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்செயற்பாடு 1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசுநிலக் கட்டளைச் சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. (No of 1897 An Ordinance relating to Claims to Forest, Chena Waste and Uncoupled Lands)

காணி நிருணயம் தொடர்பான வரலாற்று ரீதியான விரிவாக்கம்.

காணி நிருணயத் திணைக்களம் 1903ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியாளர்களால் நாட்டின் கரையோரப் பிரதேசத்துக்கு ஏற்புடையதான வகையில் 1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டம் (அத்துமீறிக் கைப்பற்றுதல்) விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் உரிமையை நிரூபிக்க முடியாமலிருந்த அனைத்துக் காணிகளும் அரசாங்கத்துக்குரியதெனப் பூர்வாங்க முடிவெடுக்கப்பட்டது. 1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசுநிலக் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டதோடு, அதன்மூலம் பயிர்செய்யப்படாத அனைத்துக் காணிகளும் அரசாங்கத்துக்குரியது எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்கள் அரசாங்க அதிபர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன. அத்துடன் 1903ஆம் ஆண்டு தனித் திணைக்களமாகக் காணி நிருணயத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்தின் பின்னர் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட சட்டங்கள் போதுமானவையாக அமையாததால், அதற்காக 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் முறையாக அரச சட்டமொன்றின் மூலம் ஆட்களுக்குக் காணி உரித்தை வழங்கும் பணி காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

காணி நிருணயச் செயற்பாட்டுடன் தொடர்புடைய சட்டங்கள்.

 • 1840ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச காணிகள் (அத்துமீறிக் கைப்பற்றுதல்) கட்டளைச் சட்டம்.
 • 1897ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கத் தரிசு நிலக் கட்டளைச் சட்டம்.
 • 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டம்.
 • ஆவணங்களைப் பதிவு செய்யும் சட்டம்.

காணி நிருணயம் தொடர்பான செயற்பாடு.

 • அடிப்படைக் காணிப் பரிசீலனை.
 • நிலவளவைகள் அதிபரிடமிருந்து அடிப்படை அளவை வரைபடம் கிடைத்த பின்னர் நிலப் பாகங்களைப் பரிசீலித்தல், முடிக்குரிய மற்றும் நிருணயிக்க வேண்டிய காணிகளை அடையாளம் காணுதல்.
 • நிருணய அறிவித்தலை வெளியிடல், பிரசாரம் செய்தல்.
 • மரபுரிமைகளைப் பதிவு செய்தல், நிருணயிக்கும் விசாரணைகளை நடத்துதல்.
 • அளந்து ஒதுக்க வேண்டுமானால் அத்தேவையை நிலவளவைகள் திணைக்களத்திற்கு முன்வைத்தல்.
 • அளந்து ஒதுக்கப்பட்டது கிடைத்த பின்னர் வரிவரைபடம் கோரல்.
 • நிருணயக் கட்டளையைத் தயாரித்து ஆட்களுக்கு நிருணயிக்கப்பட்ட காணிகளைக் காணிப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தல்.
 • நிருணயிப்பதற்காகக் கௌரவ அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்தல்.
 • நிருணயக் கட்டளையை வர்த்தமானியில் வெளியிடல், வரைபடங்களையும், வர்த்தமானிகளையும் விநியோகித்தல்.
 • கிராமத்தை விடுவித்தல்.

நிருணயப் பணிகளின்போது காணி நிருணயத் திணைக்களத்திற்கு உதவுகின்ற நிறுவனங்கள்.

 • நில அளவைகள் திணைக்களம்.
 • அரசாங்க அதிபர் அலுவலகங்கள்.
 • பிரதேச செயலகங்கள்.
 • அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் பிஸ்கால் அலுவலகங்களும்.
 • அரசாங்க அச்சகத் திணைக்களம்.

காணி நிருணயத்தின் மூலம் கிடைக்கின்ற பயன்கள்.

 • சட்டபூர்வமான உரித்து இல்லாமல் அனுபவிக்கின்ற காணிகளுக்குச் சட்டபூர்வமான உரித்துக் கிடைத்தல்.
 • அரச காணிகளின் உரிமையை உறுதிப்படுத்தல்.
 • பரம்பரை உரிமையை உறுதிப்படுத்தல்.

காணிகள் தொடர்பில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசேடமான விடயங்கள்.

 • எந்தவொரு காணியையும் முதல் முறையாகப் பதிவு செய்கின்றபோது அரசாங்கப் பத்திரமொன்றை அடிப்படையாகக் கொண்டு பதிய வேண்டும்.
 • காணி கொடுக்கல் வாங்கல் பத்திரங்களில் கட்டாயமாக முந்திய பதிவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • காணி தொடர்பான எந்தவொரு பத்திரத்திலும் திட்டவட்டமான எல்லைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
 • காணியொன்றின் பரப்பளவு அளவீட்டுத் திட்டமொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

>எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள்.

 • தரிசுநிலக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நிருணயிக்கப்பட்ட கிராமங்கள் பற்றிய விபரங்கள்.
 • தரிசுநிலக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி நிருணயக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் நிருணயிக்கப்பட்ட கிராமங்களில் நிருணயத்திற்குச் சம்பந்தப்படுத்திக்கொள்ளாத முடிக்குரிய காணிகள் தொடர்பான விபரங்கள்.
 • காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் நிருணயிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஆட்கள் தொடர்பான தகவல்கள்.
 • காணி நிருணயத் திணைக்களத்தினால் அரசாங்கத்துக்குரிய காணிகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற காணிகள் தொடர்பான தகவல்கள்.
 • நிருணயக் கட்டளை வெளியிடப்படுகின்ற வர்த்தமானி தொடர்பான தகவல்கள்.